logo
ஒரு பாமர தமிழனின் மனக்குமுறலும், கேள்விகளும்…

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் பத்திரிக்கை செய்தி

ஒரு பாமர தமிழனின் மனக்குமுறலும், கேள்விகளும்…

 1. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு துப்பாக்கி சூட்டில் பலியான 13 குடும்பத்திற்கு தலா 20 லட்சம் இழப்பீடு கொடுக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகளால் தூண்டப்பட்ட கலவரத்தை ஒடுக்குவதற்காக துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறி உயிரிழந்தவர்களுக்கு 20 லட்சம் என்றால், பயங்கரவாதிகளால் தீயிட்டு எரிக்கப்பட்ட பேருந்தில் கருகி பலியான கருங்குளத்தை சேர்ந்த வள்ளியம்மாள் குடும்பதிருக்கு ரூ. 20 கோடி இழப்பீடு கொடுக்க தமிழக அரசாங்கம் முன்வருமா? (பயங்கரவாதிகளிடமிருது பொதுமக்களை காக்க தவறிய குற்றத்திற்காக தமிழக அரசு அபராதமாகவும் இதை கருதலாம்).

 

 1. துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட நபர்களில் பயங்கரவாதிகளும் உள்ளார்கள் என்று அடையாளம் காணப்பட்டால் அத்தகைய நபர்களுக்கும் தமிழ்நாடு அரசாங்கத்தின் இழப்பீட்டு தொகை உண்டா ? இல்லையா ?

 

 1. துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட நபர்களுக்கு கொடுக்கப்படும் இழப்பீடு என்பது தவறு செய்ததில் தண்டனை தொகையாக கூட கருத முடியும். இந்நிலையில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டால் பயங்கரவாதிகளை கொன்றது காவல்துறையின் தவறு என்று ஒப்புக்கொள்ளப்பட்டதாகும். அவ்வாறாயின் பயங்கரவாதிகளை கொன்ற குற்றத்திற்காக காவல்துறையை சேர்ந்த காவலர்களுக்கும், துப்பாக்கி சூடு நடத்த அனுமதி கொடுத்த வருவாய்துறை அதிகாரிக்கும் உச்சபட்ச மரண தண்டனை பெற்று தரும் அளவிற்கு வழக்கு போடும் நிலையில் தமிழக அரசு உள்ளதா ?

 

 1. பயங்கரவாதிகள் ஊடுருவிய காரணத்தினால் தான் கலவரமும், துப்பாக்கி சூடும் நடந்தது என்று முதல்வரும், காவல்துறை அதிகாரிகளும் வெளிப்படையாக கூறியுள்ளார்கள். அப்படி இருந்தும் பயங்கரவாதிகளை ஏன் தமிழகத்தில் வளரவிட்டீர்கள் என்ற கேள்வியை தி.மு.க ஏன் இன்னும் எழுப்பவில்லை? தமிழக அரசாங்கத்தை ஏன் கண்டிக்க முன்வரவில்லை.

 

 1. தமிழகத்தில் பயங்கரவாதிகள் உள்ளார்கள் என வெளிப்படையாக தமிழக அரசு கூறிய நிலையில் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து அவர்களை தண்டிக்க வேண்டும், இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று கூற தி.மு.க. தயங்குவதன் காரணம் என்ன ?

 

 1. மொழி, மதம் போன்ற காரணங்களை காட்டி பிரிவினைவாதம் மற்றும் பயங்கரவாதம் செயல்களில் ஈடுபடுவோரை மக்கள் அடையாளம் கண்டு புறக்கணிக்க வேண்டும் என்றும், அதை வளரவிட்ட அ.தி.மு.க அரசை கண்டிக்க வேண்டும் என்றும் அறைகூவல் விட தி.மு.க தயங்குவதன் நோக்கம் என்ன ?

 

 1. பிரிவினைவாதம், பயங்கரவாதம் மூலம் தமிழர்களை கொன்று குவிக்க தயாராகி வரும் தீய சக்திகளுக்கும் தங்கள் கட்சிக்கும் தொடர்பே இல்லை என்று உறுதிபட தி.மு.க தயங்குவதன் காரணம் என்ன ?

 

 1. தங்கள் கட்சிகளில் உள்ள தற்போதைய, முந்தைய பிரதிநிதிகள், அவர்களுடைய கட்சி சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற மக்கள் பிரதிநிதிகள் ஆகியோருக்கும், பயங்கரவாத இயக்கங்களுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்று அறுதியிட்டு கூற கழகங்களும், காங்கிரஸ் போன்ற கட்சிகளும் தயாராக உள்ளார்களா ?

 

 1. நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தில் முறைப்படி கலந்துகொள்ளாமல், பள்ளியை கட் அடித்து செல்லும் மாணவனை போல சட்டமன்றத்திற்கு செல்லாமல் நாடகமாடி, கேலிக்கூத்தான தங்களுக்குள் போலித்தனமான சட்டமன்ற கூட்டத்தை நடத்தி பொழுதுபோக்கும் கீழ் நிலையில் தி.மு.க. செயல்படுவதற்கான காரணம் என்ன ?

 

 1. சட்டமன்ற விவாதத்தில் கலந்துகொண்டால் தி.மு.க. அதிமுக, காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஸ்டெர்லைட் ஆலை விசயத்தில் தமிழக மக்களுக்கு, குறிப்பாக தூத்துக்குடி மக்களுக்கு செய்த துரோகங்களை பரஸ்பரம் முன்னெடுத்து வைப்பார்கள் என்று சட்டமன்றத்தில் சூடான விவாதத்திற்காக காத்திருந்த தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் சட்டமன்றத்தை புறக்கணிக்கும் செயலுக்கு காரணம் என்ன ? இப்புறக்கணிப்பு ஆளும் அதிமுக அரசிற்கு மறைமுகமான ஆதரவு நிலையை உருவாக்குகிறது என்று மக்கள் கருதுவது சரியா ? தவறா ?

 

 

 1. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மரியாதைக்குரிய ராஜீவ்காந்தி அவர்கள் 1991ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டார் என்று முதலைக்கண்ணீர் இன்றும் விட்டுக்கொண்டிருக்க கூடிய காங்கிரஸ் கட்சி, இந்த பயங்கரவாதம் மீண்டும் தமிழகத்தில் தலைவிரித்தாடுகிறது என்று தெரிந்தும் அதை கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாதது தான் ராஜீவ்காந்திக்கு செலுத்தும் அஞ்சலி என்று அக்கட்சி கருதுகிறதா ?

 

 1. திமுக நடத்திவரும் பட்டிமன்ற முறையிலான போலி சட்டமன்ற கூட்ட நாடகத்தில் பேசும் சட்டமன்ற உறுப்பினர்களின் கொச்சையான கேட்க சகிக்காத வார்த்தைகளையும், உடல் செய்கைகளையும் நேரடியாக கண்டும் அதை தடுக்க மனமின்றி ரசிக்கும் நிலையில் கட்சியின் தலைமையும் மற்ற சட்ட மன்ற உறுப்பினர்களும் செயல்படுவது அந்த அரங்கத்திலேயே அவர்கள் கட்சியைச் சேர்ந்த பெண் உறுப்பினர்களின் மனநிலை பற்றி கவலைப்படாமல் இருந்துக் கொண்டிருப்பது, நாளை ஒருவேளை திமுக ஆட்சிக்கு வந்தால் இப்படி தான் நாங்கள் சட்டமன்றத்தை நடத்துவோம் என்று பறைசாற்றுவதாக எடுத்துக் கொள்ளலாமா ?

 

இக்கேள்விகளை எழுப்புவது தமிழகத்தில் உள்ள கோடிக்கணக்கான தமிழர்கள் என்பதை நினைவில் வைத்து திமுக தமிழக மக்களுக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

–    பொன். இராதாகிருஷ்ணன்