logo
அகில இந்திய அளவில் அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தியவர் டாக்டர் கலைஞர்

மாண்புமிகு மத்திய நிதி மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்களின் அஞ்சலி செய்தி

மறைந்த தமிழகத்தின் மூத்த தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு எனது இதய பூர்வ அஞ்சலியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக அரசியல் வரலாற்றில் 80 ஆண்டுகள் நீங்காத இடம்பிடித்தவர். தமிழக சட்டமன்றத்தில் தொடர்ந்து 60 ஆண்டுகள் சட்டமன்ற உறுப்பினராக அங்கம் வகித்து பணிபுரிந்தவர். தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகுத்தவர். தமிழக அரசியலை தனது சாதுர்யத்தாலும், புத்திகூர்மையாலும் திசை திருப்பும் சக்தி படைத்த தலைவராக திகழ்ந்தவர். அகில இந்திய அளவில் அரசியல் திருப்பங்களை ஏற்படுத்தியதுடன், அரசியல் மாற்றங்களை சர்வ சாதாரணமாக நிகழ்த்தி காட்டியவர்.

தமிழகத்தின் எழுத்துலகில் கோலோச்சியதோடு, திரைத்துறையில் வசனகர்த்தாவாக, கவிஞராக, நடிகராக, தயாரிப்பாளராக என பன்முகத் தன்மையோடு விளங்கியதுடன், நடிகர்திலகம் சிவாஜி கணேசன், புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர், எஸ்.எஸ். ராஜேந்திரன், ஜெய்ஷங்கர் போன்ற பலரது திரையுலக வாழ்க்கைக்கு பக்க பலமாக திகழ்ந்தவர். இப்படி டாக்டர் கலைஞர் அவர்களை பற்றி சொல்வதென்றால் மணிக்கணக்கில் சொல்ல முடியும். அவரது சிறப்பு இயல்புகளில் குறிப்பிட்டு சொல்வதென்றால், எதிர் கருத்து கொண்டிருப்பவர்களை மதித்து நடந்ததோடு, அவர்களை கௌரவப்படுத்தும் தன்மையும் கொண்டவராக விளங்கினார். கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக டாக்டர் கலைஞர் அவர்களோடு எனக்கு ஏற்பட்ட நெருக்கமும், பழக்கமும் என்றும் மறக்க முடியாத ஒன்று.

லட்சக்கணக்கான தொண்டர்களை உடன் பிறப்பே! என்ற ஒற்றைச் சொல்லால் கிறங்க வைத்த அவரது ஆளுமை, கலைஞரின் கணீர் என்ற குரலோசை ஆகியவற்றை இனி என்று கேட்போம் என ஏங்கி தவிக்கும் தி.மு.க. தொண்டர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாக டாக்டர் கலைஞர் அவர்களின் மறைவு அமைந்துவிட்டது.

அவரது பிரிவால் வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு, அவரது ஆன்மா நற்கதி அடைய எல்லாம் வல்ல அன்னை பராசக்தியை பிரார்த்திக்கின்றேன்.
– பொன். இராதாகிருஷ்ணன்