logo
திரு. விசு அவர்களின் மறைவு பாஜக.,வுக்கும், கலைத்துறைக்கும் பேரிழப்பாகும்

திரைப்பட இயக்குனர், தயாரிப்பாளர், கதாசிரியர், வசனகர்த்தா மற்றும் நடிகருமான திரு. விசு அவர்கள் இன்று உடல்நலக்குறைவினால் காலமானார் என்ற செய்தியைக் கேட்டு அதிர்ச்சியுற்றேன்.

தமிழின் தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரான கே. பாலச்சந்தர் அவர்களிடம் உதவி இயக்குனராக இருந்து பின்னர் இயக்குனரானார். இவருடைய பெரும்பாலான திரைப்படங்கள் சமூக, குடும்பத் திரைப்பட வகையைச் சேர்ந்ததாகும்.

சன் தொலைக்காட்சியில் அரட்டை அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தினார். பின்னர் அதிலிருந்து விலகி ஜெயா தொலைக்காட்சியில் மக்கள் அரங்கம் என்கிற பெயரில் ஒரு பேச்சு நிகழ்ச்சியை நடத்தி வந்தார்.

பின்னர் பாரத பிரதமர் திரு நரேந்திர மோடிஜி அவர்களின் செயல்களால் ஈர்க்கப்பட்டு 2016 ம் ஆண்டு தன்னை பாரதிய ஜனதா கட்சியில் இணைத்துக்கொண்டு தான் மக்கள் பணியாற்ற பாஜகவில் இணைந்ததாகவும், தமிழகத்தில் மக்கள் விரும்பும் மாற்றத்தை பாஜகவால் மட்டுமே தர முடியும் என்றும் தெரிவித்தார்.

அவருடைய இழப்பு பாரதிய ஜனதா கட்சியினருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் , கலைத்துறையினருக்கும் மிகப்பெரிய பேரிழப்பாகும். அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு அவருடைய ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.

என்றும் தாயகப்பணியில்

Dr.L.முருகன்

மாநில தலைவர்