logo
கரும்பு இனப்பெருக்க நிறுவனம் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறது

இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனங்களை இணைப்பது தொடர்பாக எழுந்த சர்ச்சை குறித்து மாண்புமிகு மத்திய நிதித்துறை மற்றும் கப்பல்துறை இணையமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள், மாண்புமிகு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங் அவர்களை நேரில் சந்தித்து பேச இருந்த நிலையில், திரு. ராதா மோகன் சிங் அவர்கள் வெளியூர் பயணம் மேற்கொண்டிருந்ததால் இது விஷயமாக ஒரு விரிவான கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, கோயம்பத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்க நிறுவனம் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. 1912ஆம் ஆண்டு முதல் கரும்பு ஆராய்ச்சியாளர்கள் மற்றும் விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறது. மேலும் இந்த நிறுவனத்தின் ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்ட கரும்பு ரகமான Co. 86032 கரும்பு பயிரிடப்படும் நிலப்பரப்பில் தமிழ்நாட்டில் 80%, மகாரஷ்டிரா, கர்நாடகாவில் தலா 50% மற்றும் குஜராத், தெலுங்கான, ஆந்திரபிரதேஷ், ஒடிசா ஆகிய மாநிலங்களில் கணிசமான நிலப்பரப்பிலும் பயிரிடப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற பல முக்கிய ரகங்களிலான கரும்பு ரகங்களை இந்த ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது. இவ்வாறு கரும்பு ஆராய்ச்சி மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டிற்காக பெரிதும் உதவிக் கொண்டிருக்கும் இக்கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிறுவனம், தன்னிச்சையாகவும், தேவையான ஆராய்ச்சியாளர்களையும் பெற்றிருக்க வேண்டியது இன்றியமையாதது.

இந்த நிறுவனம் தன்னிச்சையாக செயல்பட முடியாமல் வேறு ஒரு கரும்பு ஆராய்ச்சி நிறுவனத்தோடு இணைக்க வேண்டும் என்ற கட்டாய சூழ்நிலை ஏற்படும் பட்சத்தில், கோவை கரும்பு இனப்பெருக்க நிறுவனத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படுமாறு அமைத்திட வேண்டும்.

இது குறித்து விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. ராதா மோகன் சிங் அவர்களுக்கு அக்கடிதத்தின் மூலம் அமைச்சர் திரு. பொன். இராதாகிருஷ்ணன் அவர்கள் வலியுறுத்தியுள்ளார்.