logo
சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் தலைமையிலான முதல் கல்விக் குழுவின் பரிந்துரை தான் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்
சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன் தலைமையிலான முதல் கல்விக் குழுவின் பரிந்துரை தான் நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் பற்றிய பல்கலைக்கழக மானியக் குழு சட்டப் பிரிவு 23-இன் அடிப்படையாக அமைந்தது.
 
“பல்கலைக் கழகம்” என்ற பதத்தை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் பயன்படுத்துவது குறித்து 1984-ஆம் ஆண்டு 3 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு விவாதித்தது.
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் அனைத்தும் அரசு நிர்வாக ஒப்புதலுடன் கட்டமைக்கப்பட்ட பொதுப் பல்கலைக் கழகங்கள் என்பதால் அவை “பல்கலைக் கழகம்” என்ற பதத்தைப் பயன்படுத்த அனுமதிக்கலாம் என மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகம், பல்கலைக்கழக மானியக் குழு, அகில பாரத தொழில்நுட்ப கல்விக் குழு மூன்றும் இணைந்து முடிவெடுத்தன.
பல்கலைக்கழக மானியக் குழு 13-09-2006 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் இதை அனுமதித்தது. மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் இவ்விஷயத்தைப் பாராளுமன்றத்தில் பேசியது 05-12-2006 தேதியில் பதிவாகியும் இருக்கிறது.
ஆனால் 03-11-2017-ஆம் தேதி உச்சநீதிமன்றம் 4 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் குறித்த ஓர் வழக்கு விசாரணையின் போது, “பல்கலைக் கழகம்” எனும் பதத்தை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் பயன்படுத்த தடை விதித்தது.
உச்ச நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புக்கு முரணானதாகவும், உள்நாடு மட்டுமன்றி வெளிநாடுகளிலும் மாணவர்கள் கல்வியாளர்கள் மத்தியில் குழப்பத்தை விளைவிப்பதாகவும் இந்த முடிவு அமைந்துள்ளது.
“பல்கலைக்கழக மானியக் குழு சட்டப் பிரிவு 23-இன் படி பல்கலைக் கழக(ம்)” அந்தஸ்து பெற்றவை என்பதை நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் வெளிப்படையாக அறிவிக்கும் வண்ணம் பல்கலைக்கழக மானியக் குழு சட்டப் பிரிவு 23-இல் தக்க திருத்தத்தைக் கொண்டு வரலாம் என்பது கல்வியாளர்களின் எண்ணம்.
அது மட்டுமன்றி நாட்டிலுள்ள 123 நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களும் அகில பாரத தொழில்நுட்ப கல்விக் குழுவை அணுகி பொறியியல், தொழில்நுட்பப் பாடப் பிரிவுகளுக்கு அனுமதி பெற வேண்டும் என்றும் அவ்வழக்கின் தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இது நடைமுறைக்குச் சாத்தியமற்றதாகத் தோன்றுகிறது. எனவே நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள் எதிர் கொண்டுள்ள இப்பிரச்சனைகளுக்குத் தகுந்த நடவடிக்கைகள் மூலம் தீர்வு காண வேண்டும் என மத்திய அரசை வேண்டுகிறேன்.
ஏற்கனவே இது குறித்து மாண்புமிகு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம் தனிப்பட்ட முறையில் நான் பேசி இருந்தாலும் கூட, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவையும் வேண்டி இவ்விஷயத்தைப் பொதுவிலே அவையில் முன் வைக்கிறேன்.
நிகர்நிலைப் பல்கலைக் கழகங்களின் பல்கலைக்கழக அந்தஸ்து தொடர்பாக   கோரிக்கையை முன் வைத்து இன்று காலை மாநிலங்களவை பூஜ்ய நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இல.கணேசன் பேசியதன் தமிழாக்கம்