logo
தமிழ் விருதுகள் எதுவும் நீக்கப்படவில்லை , விமர்சிக்க வேண்டாம்
செம்மொழி விருதில் தமிழ் புறக்கணிக்கப்பட்டது போல் இன்றைய காலை செய்தித்தாளில் ஓர் கருத்து பதிவிடப்பட்டிருந்தது உடனே நான் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தை தொடர்பு கொண்டேன், மின் அஞ்சலும் அனுப்பினேன் அதற்கு அவர்கள் தமிழ் நிச்சயம் புறக்கணிக்கப்படவில்லை பல ஆண்டுகளாகத் தமிழ் விருதுகள் எட்டுக்கும் மேற்பட்ட விருதுகள் கொடுக்கப்பட்டு வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்ட மொழிகளை பற்றி தான் இந்த அறிவிப்பு கொடுக்கப்பட்டது. ஏற்கனவே உள்ள தமிழ் விருதுகள் எதுவும் நீக்கப்படவில்லை, இதை தவறாக புரிந்துகொண்டு விமர்சிக்க வேண்டாம் என்ற தெளிவான விளக்கத்தை மத்திய அரசு கொடுத்துள்ளார்கள், ஆனால் அண்ணன் ஸ்டாலின் தமிழை மத்திய அரசு புறக்கணிப்பது போலவும், வேண்டுமென்றே தமிழ் வெறுப்புணர்வு பாஜக விடம் ஊறியிருக்கிறது என்ற விஷ கருத்துக்களை கக்கியிருக்கிறார்.
நேற்றைய தினம் மனதோடு பேசுகிறேன் என்ற வானொலி உரையில் பாரத பிரதமர் அழகாக பண்டைத் தமிழர்கள் தண்ணீர் சேமிப்பை கல்வெட்டுக்களில் பதிந்து இருக்கிறாரகள் என்ற வரலாற்றை பேசியது உங்கள் காதுகளில் விழவில்லையா? விழாது. ஏனெனில் மோடி எதிர்ப்பு எனும் வெறுப்பு உங்கள் காதுகளை அடைத்திருக்கும் போது மோடி அவர்களின் அழகு தமிழ் பெருமை கூற்று காதில் விழாது.
திமுக காங்கிரஸ் ஆண்ட காலத்தில் ரயில் பயண சீட்டில் தமிழை நீக்கியது ஏன்? அதை மீண்டும் கொண்டுவந்தது எம் பிரதமர் மோடி அரசு தானே. மோடி எதிர்ப்பு எனும் கருப்பு கண்ணாடியை நீங்கள் அணிந்து இருப்பதால் இவையெல்லாம் உங்கள் கண்களில் படாது.
தமிழக பாஜக தமிழுக்காக நடிக்கிறார்கள் என்று கூறுகிறீர்களே தமிழ் உணர்விலும், உயர்விலும் அதிகம் பங்கெடுத்து தாங்களா? நாங்களா? என்பதை விவாதிக்க தயாரா?
திமுக, காங்கிரஸ் ஆண்ட காலத்தில் நடந்த இலங்கை தமிழர் படுகொலையே நீங்கள் தமிழர்களை புறக்கணித்ததற்கு சாட்சி, அரசியலுக்காக, பதவிக்காக கடந்த காலத்தில் காவேரி உரிமையை காவு கொடுத்த நீங்கள் இன்று தமிழ் உணர்வு பற்றி பேசுவது வேடிக்கை.
நேற்றைய தினம் டெல்லியில் ராகுல் காந்தி மக்களின் கோபம் என்று பேசினாரே அதில் ஏன் காவேரி பிரச்னையை பற்றி பேசவில்லை என்று கேட்டீர்களா? காவேரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவிடாமல் எதிர்க்கும் கர்நாடக காங்கிரஸ் கட்சியை கேள்வி கேட்க்கும் தெம்பும், திராணியும் உங்களுக்கு இருக்கிறதா?
இந்த தமிழ் விருது மத்திய அரசால் பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகிறது, அதற்கு சிறந்த உதாரணம் கடந்த 2006 ல் திமுக தலைவர் திரு. கலைஞர் அவர்களே இவ்விருதை பெற்றுள்ளார், ஆக தன் தந்தை வாங்கிய விருதை கூட தெரியாமல் இன்று ஸ்டாலின் அவர்கள் பாஜக மீதுள்ள வெறுப்பு அரசியலை செய்து வருவதை தமிழக மக்கள் புரிந்து கொள்வார்கள்.
டாக்டர். தமிழிசை சௌந்தரராஜன்
தமிழக பாஜக தலைவர்.